×

நாயகன் படம் ரீ-ரிலீஸ் ஆகிறது

சென்னை: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து, கடந்த 2006 ஆகஸ்ட் 25ம் தேதி திரைக்கு வந்து வெற்றிபெற்ற படம், ‘வேட்டையாடு விளையாடு’. சமீபத்தில் மீண்டும் திரையிடப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. இதையடுத்து, கடந்த 2001ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘ஆளவந்தான்’ படத்தையும் ரீ-ரிலீஸ் செய்தனர். இந்நிலையில், கடந்த 1987 நவம்பர் 27ம் தேதி சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல்ஹாசன், அமலா நடித்து வெளியான ‘பேசும் படம்’ என்ற முழுநீள வசனங்களே இல்லாத படத்தை டிஜிட்டலில் புதுப்பித்து ரீ-ரிலீஸ் செய்கின்றனர். இதுகுறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

அந்த வரிசையில், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படத்தை டிஜிட்டலில் புதுப்பித்து வருகின்றனர். வரும் நவம்பர் முதல் வாரம் ரீ-ரிலீஸ் செய்கின்றனர். இப்படம் கடந்த 1987ல் திரைக்கு வந்தது. சரண்யா (பொன்வண்ணன்) ஹீரோயினாக அறிமுகமானார். ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி, குயிலி நடித்தனர். இளையராஜா இசையில் ‘நீ ஒரு காதல் சங்கீதம்’, ‘அந்தி மழை மேகம்’, ‘நான் சிரித்தால் தீபாவளி’, ‘நிலா அது வானத்து மேலே’, ‘தென்பாண்டி சீமையிலே’ ஆகிய பாடல்கள் ஹிட்டானது.

இப்படத்துக்காக கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இளையராஜா இசை அமைத்த 400வது படம் இது. 36 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பது குறித்து கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. தற்போது ‘இந்தியன் 2’, ‘கல்கி 2898 ஏடி’ ஆகிய படங்களில் நடித்து வரும் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்காக தாடி, மீசை வளர்த்து வருகிறார். இதற்கு மத்தியில் வினோத் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார்.

The post நாயகன் படம் ரீ-ரிலீஸ் ஆகிறது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Kamal Haasan ,Gautham Vasudev Menon ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED உத்தமவில்லன் பட விவகாரம் தொடர்பாக...